மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம்; திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு நெறிமுறைக்குழு சம்மன்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் சர்ச்சையில், அக்டோபர் 31ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மக்களவை நெறிமுறைக் குழு சம்மன் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக, புகார் அளித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் அனந்த் தெஹாத்ராய் ஆகியோரிடம் வியாழக்கிழமை (அக்டோபர் 26) விசாரித்த மக்களவை நெறிமுறைக் குழு, மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்று தெரிவித்துள்ளது. நெறிமுறைக் குழுத் தலைவர் வினோத் சோன்கர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வழக்கின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டின் பின்னணி
தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி, அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்காக மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியதன் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், பாராளுமன்ற எம்பிக்களுக்கான தனிப்பட்ட லாகின் ஐடி மற்றும் பாஸ்வோர்டை தர்ஷன் ஹிராநந்தனியிடமே கொடுத்து, கேள்விகளை அதில் பதிவிட மஹுவா மொய்த்ரா சொன்னதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாஜக இந்த குற்றச்சாட்டை தீவிரமாக முன்வைத்துள்ள நிலையில், அவர் சார்ந்துள்ள திரிணாமுல் கட்சி இந்த விவகாரத்தில் மஹுவா மொய்த்ராவிடமிருந்து விலகியே இருக்கிறது. திரிணாமுல் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓ'பிரையன் இது குறித்து கூறுகையில், நெறிமுறைக்குழு அறிக்கையின் அடிப்படையில் கட்சி முடிவெடுக்கும் என முடித்துக் கொண்டார்.