LOADING...
புகையிலை பொருட்களுக்கு உயர் சுங்க வரி: மத்திய கலால் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
புகையிலை பொருட்களுக்கு உயர் சுங்க வரி விதிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

புகையிலை பொருட்களுக்கு உயர் சுங்க வரி: மத்திய கலால் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 04, 2025
07:33 pm

செய்தி முன்னோட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு செஸ் காலாவதியான பிறகு, புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் மீது உயர் கலால் வரியை விதிக்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றம் வியாழக்கிழமை (டிசம்பர் 4) அன்று நிறைவேற்றியது. மத்திய கலால் (திருத்த) மசோதா, 2025 மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் விவாதத்திற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் மக்களவைக்கு அனுப்பப்பட்டது. தற்போது சிகரெட்டுகள், புகையிலைக் குழாய்கள், மெல்லும் புகையிலை உள்ளிட்ட அனைத்துப் புகையிலைப் பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் விதிக்கப்படுகிறது. இந்த செஸ் நீங்கிய பிறகு, அரசுக்குப் போதுமான நிதி ஆதாரத்தை உறுதி செய்வதற்காகவே இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி

புகையிலைப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி

தற்போது, புகையிலைப் பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி மற்றும் மாறுபட்ட விகிதத்தில் செஸ் விதிக்கப்படுகிறது. மசோதாவின்படி, பதப்படுத்தப்படாத புகையிலையின் மீது 60% முதல் 70% வரை கலால் வரி விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிகரெட்டுகளுக்கு அதன் நீளம் மற்றும் வடிகட்டியைப் பொறுத்து, 1,000 ஸ்டிக்கிற்கு ₹2,700 முதல் ₹11,000 வரையிலும், மெல்லும் புகையிலைக்கு கிலோவுக்கு ₹100 என்ற அளவிலும் வரி விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புகையிலைப் பயிரிடுவதை விட்டுவிட்டு, மற்ற பணப் பயிர்களுக்கு மாறுமாறு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவதாகத் தெரிவித்தார். ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் இந்தப் பயிர் மாற்றம் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Advertisement