எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட அவைகள்
இன்று காலை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஏற்கனவே மணிப்பூர் விவகாரம், உயரும் விலைவாசி மற்றும் ஒடிஷா ரயில் விபத்து போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், மணிப்பூரில் பழங்குடியின இளம்பெண்கள் இருவரை நிர்வாணமாக அழைத்து சென்றதும், அவர்களை கூட்டு பலாத்காரம் செய்ததும் எதிர்கட்சியினரால் கண்டனத்திற்கு உள்ளாகவே, நாடாளுமன்றம் மதியம் 12 வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடிய அவையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. அவையின் மைய பகுதியில் வந்து கோஷமும் எழுப்பின. இதனால் மதியம் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம்
இதன் பின்னர் மீண்டும் இரு அவைகளும் கூடியதும், மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமையை பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அந்த வைரல் வீடியோவில், குற்ற சம்பத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை அடையாளம் கண்டு, காவல்துறை கைது செய்திருப்பதாக மணிப்பூர் முதல்வர் தெரிவித்துள்ளார். மற்றவர்களை தேடும் பணியில் சிறப்பு காவலர்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன்னர், பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, "மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி, மன்னிக்கமுடியாதது, நாட்டிற்கே வெட்கக்கேடான விஷயம். இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவர்" எனக்கூறினார்.