LGBTQIA+ சமூகப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான குழு நிச்சயமாக அமைக்கப்படும்: மத்திய அரசு
LGBTQIA+ சமூகத்தின் "உண்மையான மனிதக் கவலைகள்" குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(மே 3) தெரிவித்துள்ளது. ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது மத்திய அரசு இதை தெரிவித்திருக்கிறது. கூட்டு வங்கிக் கணக்கைத் திறப்பது, இன்சூரன்ஸ் பாலிசியில் தனது பார்ட்னரை நாமினியாக சேர்ப்பது போன்ற ஒரே பாலினத் தம்பதிகள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் இங்கு "மனித கவலைகள்"என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அமைச்சரவை செயலாளர் தலைமையில் இந்த குழு அமைக்கப்படும் என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு இன்று பதிலளித்த மத்திய அரசு
ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தது. மத்திய அரசின் கருத்துக்களை கேட்ட உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, திருமண அங்கீகாரம் வழங்கவில்லை என்றால், ஒரே பாலின தம்பதிகளுக்கு கிடைக்க வேண்டிய சமூக உரிமைகள் எப்படி வழங்கப்படும் என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தது. மேலும், அவர்களுக்கு சமூக உரிமைகள் வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி, ஏப்ரல் 27 அன்று கூறி இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு இன்று பதிலளித்த மத்திய அரசு, அதற்காக ஒரு குழுவை அமைக்க இருப்பதாக பதிலளித்துள்ளது.