ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு
ஆதார் கார்டுடன் பான் கார்டினை ஒன்றிணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது. முன்னதாக இந்த நடவடிக்கையை பூர்த்தி செய்ய மத்திய அரசு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியோடு நிறைவடைந்தது. அதன் பின்னர் சில நிபந்தனைகளோடு காலக்கெடுவானது இந்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த முறை இணைப்பினை செய்ய தவறியவர்கள் இம்முறை அதற்கான அபராதத்தை செலுத்திய பின்னர், ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைத்து கொள்ளலாம். அப்படியில்லாமல் இம்முறையும் இணைக்க தவறினால் ஏப்ரல் 1ம் தேதி முதல் பான் கார்டினை நீங்கள் எதற்காகவும் பயன்படுத்த இயலாது என்ற நிபந்தனையும் எச்சரிக்கையும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
இந்நிலையில் தற்போது ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இதற்கான சில வழிமுறைகள் இதோ, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து UIDPAN என டைப்செய்து 12 இலக்க எண்ணை உள்ளிட்டு, பான் கார்டின் 10 இலக்க எண்ணையும் உள்ளிடுங்கள். இந்த SMS'ஐ 567678 அல்லது 56161 என்னும் எண்ணுக்கு அனுப்பவேண்டும். பின்னர் இணைப்பு உறுதியானது SMS மூலம் தெரியவரும். அல்லது https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்னும் இணையத்தள லிங்க் மூலமும் இணைத்து கொள்ளலாம். இந்திய வருமான வரி சட்டம் 1961ன் படி, அனைத்து பான் அட்டை வாடிக்கையாளர்களும் இந்தாண்டு ஆதார் அட்டையுடன் இணைந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.