பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள்
பழனி முருகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதிஉலா வருவார். இந்நிலையில், திருவிழாவின் முக்கிய அம்சமான முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து மிக முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று(பிப்.,4) நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் நேற்று(பிப்.,3) முதலே பழனியில் குவிந்த வண்ணம் உள்ளனர். திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் நீராடிய பின்னர் மலை கோயில் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பெரும்பாலான பக்தர்கள் மேளத்தாளத்துடன் ஆங்காங்கே கோலாட்டம், கலில், ஒயில் ஆகிய பாரம்பரிய ஆட்டங்களை ஆடி வந்தனர்.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் ஏற்பாடுகள் தீவிரம்
அலகு குத்தியும், காவடி சுமந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தைப்பூச தேரோட்ட நிகழ்வு நடைபெறவுள்ளதால் அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு அதிகளவில் பக்தர்கள் வருவதால் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் பேருந்துகள், வாகனங்கள் செல்லதடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தவிர்க்க ஆங்காங்கே போலீசார் தீவிரப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சாலையெங்கிலும் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல், அன்னதான கூடங்களில் உணவு, குடிநீர், இளநீர், ஐஸ்க்ரீம் என வெயிலுக்கு ஏற்ற பானங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து தற்காலிக பேருந்து நிலையங்கள், சிறப்பு பேருந்துகள், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.