LOADING...
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது நிர்வாகம்
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது நிர்வாகம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2025
12:47 pm

செய்தி முன்னோட்டம்

ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற சூரசம்ஹாரம் சடங்கு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் நடைபெற உள்ளது. இந்த முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகம் சில குறிப்பிடத்தக்கக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டாலும், படிக்கட்டுகள், ரோப் கார் மற்றும் வின்ச் ரயில் மூலம் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, அனைத்துச் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் விற்பனையும் காலை 11.30 மணிக்கு நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்துவம்

பழனி சூரசம்ஹாரத்தின் தனித்துவம்

மாலை நடைபெறும் முக்கிய நிகழ்விற்கான தயாரிப்பாக, வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, பக்தர்களின் வசதிக்காகப் பிற்பகல் 1.30 மணிக்கே நடத்தப்படும். இதைத் தொடர்ந்து, போருக்கான தயாரிப்பைக் குறிக்கும் விதமாகச் சின்னக் குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து புனிதமான வேலைப் பெற்ற பிறகு, பிற்பகல் 3 மணிக்குச் சன்னதி மூடப்படும். அதன் பிறகு, திரு ஆவினன்குடி கோவிலில் வேலுக்குப் பூஜை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் தொடங்கும். மற்ற கோவில்களைப் போலல்லாமல், பழனியில் நான்கு அசுரர்களான தாரகாசூரன், பானுகோபன் சூரன், சிங்கமுகா சூரன் மற்றும் சூரபத்மன் ஆகியோரின் வதம், கிரிவீதியைச் சுற்றியுள்ள நான்கு வெவ்வேறு திசைகளில் தனித்தனியாக நடைபெறும் தனித்துவமான சடங்கு உள்ளது.