பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
பழனி முருகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆயிரகணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி சுமந்தும் கோயிலுக்கு வருகைதருவார்கள். அதைபோல், ஏராளமான பக்தர்கள் பேருந்து, ரயில் மார்க்கமாக வந்து முருகரை தரிசித்து செல்வார்கள். இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் நாளை(ஜன.,29)கொடியேற்றத்துடன் துவங்கப்படவுள்ளது. 10நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாளான நாளை(ஜன.,29) பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகியன நடக்கும். இதனை தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்ற பின்னர் கொடியேற்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதிஉலா வருவார்.
பிப்ரவரி 4ம் தேதி மாலை 4.30 மணியளவில் தேரோட்டம்
மேலும் திருவிழாவின் 6ம் நாளான பிப்ரவரி 3ம் தேதி மாலை 7 மணிக்குமேல் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வெள்ளிரதத்தில் சுவாமி வீதி உலா வருவார் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து இதற்கு மறுநாள் பிப்ரவரி 4ம் தேதி தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் 11 மணியளவில் பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்வார். அதனையடுத்து மாலை 4.30 மணியளவில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 7ம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகிறது. மிக விமர்சையாக நடைபெறவுள்ள இந்த திருவிழாவின் ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.