IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு
பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு ஒன்று, இந்திய ராணுவம் மற்றும் IIT, NIT போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தி வருவதாக எச்சரித்திருக்கின்றனர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள். இது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது, இந்தியாவின் க்விக் ஹீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான செக்ராய்ட் (Seqrite). இந்த துணை நிறுவனமானது வணிக நிறுவனங்களுக்கான சைபர் பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரான்ஸ்பரண்ட் ட்ரைப் (Transparent Tribe) என்ற ஹேக்கர் குழுவே இந்த சைபர் தாக்குதலை நடத்தி வருவதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஹேக்கர் குழுவானது, 2013-ம் ஆண்டு முதலே சைபர் தாக்குதல் முதலான சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கல்வி நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்:
அந்த ஆய்வறிக்கையின் படி, 'ராணுவ அதிகாரிகள் பணியிட மாறுதல் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்' என்ற தலைப்பிலான போலியான ராணுவ ஆவணம் ஒன்று, இந்த கும்பலால் உலவவிடப்படுகிறது. இந்த போலி ஆவணத்தில், ராணுவ கணினிகளில் உள்ள தகவல்களைத் திருடும் வகையிலான மால்வேர்களை புகுத்தி, மேற்கூறிய ட்ரான்ஸ்பரண்ட் ட்ரைப் ஹேக்கர் குழு,ஹேக் செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 2022 மே மாதத்தில் இருந்து, இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்களான IIT மற்றும் NIT உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீதும் மேற்கூறிய ஹேக்கர் குழுவானது சைபர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. 2023-ன் முதல் காலாண்டில் இந்தத் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், தகவல்களை திருட்டே இந்த சைபர் தாக்குதல்களின் முக்கிய நோக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.