நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ்
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், கால்நடைகள் உணவுக்காக தேசிய-மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரிகின்றன. தமிழகத்தில் பசு, எருமை, நாய்கள் போன்ற கால்நடைகளால் உண்டாகும் விபத்துகள் அதிகமாகி கொண்டே போகிறது. கடந்த 5ஆண்டுகளில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளும் பலியாகியுள்ளனர். இரவு நேரங்களில் கால்நடைகளை தெளிவாக பார்க்கமுடியாத காரணத்தினால் தான் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் சாலையில் திரியும் கால்நடைகளுக்கு சிவப்புநிற பட்டைகள் பொருத்தவும், கொம்புகளில் சிவப்புநிற பிரதிபலிப்பு பெயிண்ட் அடிக்கவும், சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு அதிகளவில் அபராதம் விதிக்கவும் உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.