இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள்
இந்தியாவின் முந்தைய காலகட்டத்தில் கோயில்களில் திருப்பணி செய்யவும், கோயில் சார்ந்த சேவைகளை செய்யவும் பெண்களை சிறுவயதிலேயே நேர்ந்து விடுவார்கள். அவ்வாறு நேர்ந்து விடப்படும் பெண்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டனர். கோயிலில் பணியாளர்கள் இருந்த இவர்கள் ஆடல், பாடல் கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்று திருவிழாக்களில் கடவுளை வழிபட்டு சதிராட்டம் ஆடி பக்தர்களை மகிழ்வித்தனர். அதன்படி விராலிமலை சுப்ரமணியசாமி கோயிலில் முருகப்பெருமானுக்கு பொட்டுக்கட்டி நேர்ந்துவிடப்பட்டவர் தான் முத்துக்கண்ணம்மாள். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவரான இவர் இன்று(மார்ச்.,27) கடைசி வாரிசாக வாழ்ந்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை பூர்வீகமாக கொண்ட முத்துக்கண்ணம்மாளுக்கு கலைப்பிரிவில் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.
சதிர் ஆட்டம் தான் தற்போது பரத நாட்டியமாக மாறியுள்ளது
இதுகுறித்து முத்துக்கண்ணம்மாள் பேசுகையில், விராலிமலையினை சொந்த ஊராக கொண்ட எங்கள் குடும்பமே சதிராட்ட குடும்பம் தான். என் அப்பா ராமச்சந்திரன் நட்டுவனார்கிட்ட இருந்து தான் முறைப்படி கற்றுக்கொண்டேன். எனது 7 வயது முதல் நான் சதிராட்டம் ஆடி வருகிறேன். தினமும் காலை மாலை 400 படிகள் ஏறி, இறங்கி சுப்ரமணிய சாமியை வணங்கி பாடல் பாடிக்கொண்டே நடனம் ஆடுவது தான் எங்கள் பணி என்று கூறியுள்ளார். பாடிக்கொண்டே ஆடுவது தான் சதிராட்டம். அது தான் தற்போது பரத நாட்டியமாக மாறியுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகே எங்கள் வாழ்க்கை மாறிப்போனது. ராஜாக்கள் ஆட்சி முடிந்ததால் கோயிலில் சதிர் ஆடக்கூடாது என்று கூறிவிட்டார்கள். அதற்கு பின்னர் நாங்கள் சதிர் ஆடவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.