முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு
தமிழ்நாடு சிறை காவலர்களான முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கு, அவர்களது மிகை நேர பணிக்கான (Over Time Duty) ஊதியத்தினை உயர்த்துவதாக அண்மையில் அறிவிப்புகள் வெளியானது. தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம், ரூ.200ல் இருந்து ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ரிஸ்க் அலவன்ஸ் (இடர் படி) ரூ.800ல் இருந்து ரூ.1000ஆக வழங்கப்படவுள்ளது என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3.24 கோடி நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு
கடந்த ஏப்ரல் 27, நடந்த சட்டப்பேரவையில், சீர்திருத்த பணிகள் மற்றும் சிறைகள் உள்ளிட்ட துறையில் கீழ் அமைச்சர் ரகுபதி, ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று தான், இந்த சிறை காவலர்களுக்கான மிகை நேர ஊதிய உயர்வு ஆகும். காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக இந்த மிகை நேர பணிக்கான ஊதிய உயர்வு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு கூறியிருந்தார். மேலும் அவர், சீர்திருத்த பணிகள் மற்றும் சிறைகளின் நிர்வாகத்தினை மேம்படுத்தும் வகையில், சிறைத்துறை துணை தலைவர் என்னும் பதவியினை உயர்த்தி, சிறைத்துறை தலைவர் என்று பதவியின் தரத்தினையும் உயர்த்துவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.