'ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
அதிமுக கட்சியின் வேதாரண்யம் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அதே தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேதாரத்தினம் இவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ஓ.எஸ்.மணியன் அத்தொகுதி மக்களுக்கு சுமார் ரூ.60 கோடி வரை பணப்பட்டுவாடா செய்தும், வெவ்வேறு சமூக மக்கள் மத்தியில் பிரச்சனைகளை ஏற்படுத்தியும், தொகுதி மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் அவர் ஓட்டு கேட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு
தொடர்ந்து, வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை 7000 பேருக்கு பட்டா போட்டு கொடுப்பதாக போலியான உறுதியினை வழங்கியும் வாக்கு பெற்று வெற்றிப்பெற்றார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவர், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்னிலையில் நடந்தது. பணப்பட்டுவாடா செய்திருந்தால் தேர்தல் ஆணையம் அதனை தடுத்திருக்கும் என்று வாதாடிய ஓ.எஸ்.மணியன் சார்பிலான வழக்கறிஞர், அரசியல் ரீதியான பழிவாங்கும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதங்களை முன்வைத்திருந்தார். இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று(டிச.,22) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'ஓ.எஸ்.மணியன் தேர்தல் வெற்றி செல்லும்' என்று நீதிபதி அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.