தமிழகத்திற்கு 552 புதிய தாழ்தள பேருந்துகள் வாங்க ஆணை பிறப்பிப்பு
பயணிகளுக்கான சேவைகளை பூர்த்தி செய்யவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்துவதனை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து வசதிகளும் கொண்ட 552 புதிய தாழ்த்தள பேருந்துகளை ஜெர்மன் நிதி உதவியுடன் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, ரூ.500.97 கோடி மதிப்பில் புதிய தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 352 பேருந்துகளும், மதுரைக்கு 100 பேருந்துகள் மற்றும் கோயம்பத்தூருக்கு 100 பேருந்துகள் என மொத்தம் 552 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது என்று கூறியுள்ளார்.
மீண்டும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பயணசீட்டு கருவிகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தகவல்
இது போன்ற முயற்சிகளின் அடிப்படையில் தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தவும், இதன் மூலமாக வழங்கப்படும் பொது பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்த்திடும் என்றும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் மீண்டும் தமிழகத்தின் அனைத்து அரசு பேருந்துகளிலும் பயணசீட்டு கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் தொடங்கவுள்ளதாம். இதன்படி இதற்கு தேவைப்படும் மொத்தம் 38 ஆயிரம் பயணச்சீட்டு கருவிகளை இலவசமாக வழங்க எஸ்பிஐ வங்கி முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கருவிகள் சோதனை முயற்சியில் முதலில் சில பகுதிகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு பின்னர் தமிழகம் முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.