'இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்'-வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன்
குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால்வாய்கள், குளங்கள் நிரம்பியதால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், 'தற்போதைய மழைக்கு மேக வெடிப்பு காரணம் இல்லை. வளி மண்டல சுழற்சியே காரணம்' என்று தெரிவித்துள்ளார்.
4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடருகிறது
மேலும் அவர், குறிப்பிட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர், காலநிலை மாற்றத்தால் இதுபோன்ற கனமழையை இனிவரும் காலங்களில் அடிக்கடி எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 14 இடங்களில் அதிகனமழை பெய்துள்ள நிலையில், காயல்பட்டினத்தில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 95 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை காயல்பட்டினத்தில் ஒரே நாளில் பெய்துள்ளதால் தூத்துக்குடியில் மழை நீர் வடிய தாமதமாகலாம் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.