சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கு அமைக்க திட்டம்
சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையங்குகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ள சில வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் மற்றும் 411 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி வழங்குதல் ஆகிய இரண்டு திட்டங்களுக்கான விழா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நிலையில், அமைச்சர் கே.என்.நேரு காலையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடற்கரையில் ஆய்வு செய்தார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கடற்கரையை அழகுபடுத்துவது, பொழுதுபோக்கு அம்சங்களை சேர்ப்பது போன்றவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கடற்கரையை தூய்மையாக பராமரிப்பது, கடைகளை முறைப்படுத்துவது போன்றவை குறித்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் கே.என்.நேரு கேட்டறிந்தார்.
மாநகராட்சியின் துணை மேயர் பேட்டி
அமைச்சர் ஆய்வை முடித்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், "மெரினாவை சர்வதேச தரத்தில் அழகுபடுத்துவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவுக்காக காத்திருக்கிறோம். பின்னர், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான தற்காலிக கட்டமைப்புகள் மூலம் திறந்தவெளி திரையரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள் போன்றவை உருவாக்கப்படும். மேலும், மாற்றுத் திறனாளிகள் கடல் அலையை ரசிக்க உருவாக்கியது போன்று, முதியோர் ரசிக்கவும் பிரத்யேக வசதி, இசை நீருற்று உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது." என்று கூறினார்.