ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் ஆகும். அதிலும் நவம்பர் மாத துவக்கத்தில் நீர்ப்பனி ஆரம்பித்து படிப்படியாக உறைபனி பொழியும். ஆனால் தொடர் மழை காரணமாக இந்தாண்டு ஜனவரி மாதம் பனிப்பொழிவு துவங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது, வழக்கத்தை விட குளிரும் அதிகமாக உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அதன்படி இன்று காலை ஊட்டியில் பல்வேறு இடங்களில் உறைபனி அதிகமாக காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், குதிரை பந்தைய மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி அதிகமாக காணப்பட்டு வருகிறது.
மரம், செடி கொடிகளில் படர்ந்த உறைபனி - புல்வெளிகள் மீது 1 அங்குலத்திற்கு மேல் படிந்தப்பனி
ஊட்டியில் மரங்கள், செடி-கோடிகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது, புல்வெளிகள் மீது உறைபனி பொழிவு அரை அங்குலத்திற்கு மேல் படர்ந்து வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளித்தது. இதனையடுத்து மோட்டார் சைக்கிள், கார் போன்ற நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனிக்கட்டிகள் உறைந்து காணப்பட்டது. அதனை மக்கள் தங்கள் கைகளில் எடுத்து பார்த்து ரசித்தனர். கடுங்குளிர் காரணமாக அவலாஞ்சியில் 0 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. உதகையில் பத்தாவது நாளாக தொடரும் இந்த பனி பொழிவால் மக்கள் சுவட்டர்களை அணிந்துகொண்டு பயணிக்கிறார்கள். சாலை ஓரங்களில் தீ மூட்டப்பட்டு குளிர் காய்ந்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.