
கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம்
செய்தி முன்னோட்டம்
தற்போதைய காலக்கட்டத்தில், ஆன்லைனில் கடன் தரும் ஏராளமான செயலிகள் செயல்பட்டு வருகிறது.
இதுபோன்ற செயலிகளில் அவசர தேவைகளுக்கு பணத்தை கடனாக பெற்றுவிட்டு, பிறகு அந்த செயலிகளின் மோசடிகளில் சிக்கி தவிப்பவர்கள் பலர்.
இது போன்ற கடன் வழங்கும் செயலிகள் கூடுதல் வட்டி விதித்து வசூல் செய்வதோடு, பணத்தை முழுதாக கட்டி முடித்தாலும் கூடுதலாக பணம் கேட்டு தொல்லை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் பணத்தை நாம் செலுத்த மறுத்தால் போனில் உள்ள தொடர்பு எண்களை தாமாகவே எடுத்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் மெசேஜ் செய்து தொந்தரவு செய்வதோடு, கடன் வாங்கியவருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இந்நிலையில் கடன் வாங்கி, செலுத்தாத நபரை போலீசில் நூதனமாக சிக்கவைத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
போலீசார் தீவிர விசாரணை
வெடி குண்டு தயாரிப்பதாக போலீசில் போலி குற்றச்சாட்டு செய்த ஆன்லைன் லோன் செயலி
சென்னை மாங்காடு, முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் கபீர் முகம்மது. இவர் கடந்தாண்டு விபத்து ஒன்றில் சிக்கியதால் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி, அதனை சரியாக செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இவரை சிக்க வைக்க, காவல்த்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, 'நாங்கள் ஜப்பானில் இருந்து பேசுகிறோம். மாங்காடு அருகே கபீர் முகம்மது என்பவர் வெடிகுண்டு தயாரித்து வருகிறார்' என்றுகூறி அழைப்பை துண்டித்துள்ளனர்.
இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சென்றபின், அது தவறான தகவல் என்றும் கபீர் ஆன்லைனில் 5 லட்சம் வரை கடன் வாங்கி, சரியாக கட்டவில்லை என்பதும் போலீசுக்கு தெரியவந்துள்ளது.
இதன் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.