'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
டெல்லியில் இன்று(பிப்.,18) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. இதில் கலந்துகொண்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடைபெற இருந்தது. ஆனால் இடைத்தேர்தல், குடியரசு தலைவர் வருகை ஆகியவற்றால் தவிர்க்கப்பட்டது. எனவே அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த நிர்மலா சீதாராமன் ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்தார். ஜிஎஸ்டி பிரச்சனைகள் தொடர்பாக பல கோரிக்கைகளை ஒரு மனுவாக தயாரித்து மத்திய நிதியமைச்சரிடன் கொடுக்க உள்ளதாகவும், 2020-21ம் ஆண்டின் ஜிஎஸ்டி ரூ. 4,230கோடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே தேசம், ஒரே வரி என்பதை ஒருபோதும் செயல்படுத்த இயலாது
மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. முக்கியமாக தீர்ப்பாய உறுப்பினர்களின் நியமனம் போன்றவற்றில் மாநிலங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 2-3 மணிநேர விவாதத்திற்கு பிறகு அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்துப்பூர்வ அறிக்கை விரைவில் வழங்கப்படும் என்று கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டது. எனவே குழுவின் அறிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். தொடர்ந்து, ஒரே தேசம், ஒரே வரி என்பதை ஒருபோதும் செயல்படுத்த இயலாது. ஜிஎஸ்டி இழப்பை நீட்டிப்பது குறித்து விவாதிக்காமல் நிதி அமைச்சகமும் பிரதமரும் முடிவு செய்வதை ஏற்க முடியாது. அது ஜனநாயக நடைமுறை அல்ல என்றும் அவர் கூறினார்.