எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்
ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை முன்மொழியும் மசோதா, அரசியலமைப்பு (நூற்றி இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா, 2024 என்ற தலைப்பில், செவ்வாய்க்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிடிஐ கருத்துப்படி, இந்த மசோதா விரிவான விவாதங்களுக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்படலாம். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்தார். மத்திய சட்ட அமைச்சர் மக்களவையில் கூறுகையில், மசோதா மீதான கூடுதல் விவாதத்திற்காக இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்ப அரசு தயாராக உள்ளது எனத்தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , இது "கொடுமையானது" என்றும், இது "பிராந்தியக் குரல்களை அழித்துவிடும்" என்றும், "கூட்டாட்சியை சிதைக்கும்" என்றும் கூறினார். இது சர்வாதிகார திணிப்பு என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடினார். திமுக எம்பி டிஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு 2/3 பெரும்பான்மை இல்லாதபோது, நாடாளுமன்றத்தில் எப்படி மசோதாவை தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்த்து, இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை சவால் செய்கிறது என்று கூறினார்.
மசோதாவை நிறைவேற்ற அரசுக்கு கணிசமான ஆதரவு தேவை
இந்த மசோதா நிறைவேற, அரசுக்கு மக்களவையில் 361 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 154 எம்பிக்களும் ஆதரவு தேவை. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பிஜு ஜனதா தளம், அதிமுக போன்ற கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேவைப்படும். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, இந்தியாவின் தேர்தல் செயல்முறையை மாற்றியமைக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைத்தது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் முடிந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குழுவின் அறிக்கை பரிந்துரைத்தது.