ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நாளை அறிமுகம்; சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தாக்கல் செய்கிறார்
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக திங்கட்கிழமை மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், இந்த மசோதாவின் நகல் எம்பிக்கள் மத்தியில் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20 ஆம் தேதி முடிவடைவயும் நிலையில், மத்திய அரசு தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது. முன்னதாக, மத்திய அமைச்சரவை டிசம்பர் 12 அன்று மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று இந்த மசோதா பரிந்துரைக்கிறது.
தேர்தல் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் முயற்சி
பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், அதனுடன் தொடர்புடைய செலவினங்களைக் குறைப்பதற்கும் ஆளுகைக்கு உகந்த நடவடிக்கையாக இந்த முயற்சியை முன்வைத்துள்ளார். இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன, சீர்திருத்தம் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைக்கும் என்றும் பிராந்திய கட்சிகளை ஓரங்கட்டலாம் மற்றும் அதிகாரத்தை மையப்படுத்தலாம் என்றும் வாதிட்டு வருகின்றனர். எனினும், ஒரே நாடு நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. 1951 மற்றும் 1967க்கு இடையில், இந்தியா மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தியது. 1968-69ல் மாநிலங்களின் மறுசீரமைப்பு மற்றும் சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதன் மூலம் இந்த நடைமுறை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.