கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுமொரு வழக்குப்பதிவு
முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எனினும், கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா நினைவு சின்னம் ஒன்றினை ரூ.81 கோடி செலவில் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்து வருகிறது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்றும் தமிழக அரசால் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பல வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது.
கடல் அரிப்பினை தடுக்க மரக்கன்றுகளை நடவு செய்தல் வேண்டும்
அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இந்த பேனா நினைவு சின்னத்தினை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பேனா நினைவு சின்னத்தினை அமைக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதோடு கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும், கடல் அரிப்பினை தடுக்க மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.