தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகள் கூட்டத்தின் எண்ணிக்கை 4ல் இருந்து 6 ஆக இவ்வருடம் மாற்றப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. வழக்கமாக ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 தேதிகளில் கிராம சபைகள் நடத்தப்படும். ஆனால் இம்முறை இந்த 4 நாட்களோடு சேர்த்து மார்ச் 22 உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர் 1 உள்ளூர் நிர்வாக தினம் ஆகிய தினங்களிலும் கிராம சபை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று(மார்ச்.,22) கிராம சபை கூட்டம் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது. வழக்கமாக 12,521 கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக்கூட்டம், 4 கிராமங்களில் மட்டும் சில சட்ட சிக்கல்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
அனைத்து கிராமங்களிலும் ஜல் ஜீவன் திட்டம்
உலக தண்ணீர் தினத்தன்று நடந்த இந்த கிராம சபை கூட்டத்தில் மொத்தம் 22.81 லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 58.6 சதவீதம் பெண்கள், 41 சதவீதம் ஆண்கள் மற்றும் 9,942 மூன்றாம் பாலினத்தவர்கள் பங்கேற்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்த கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம், நீரினை தேவைக்கேற்ப பயன்படுத்துதல், மரம் நடுதல், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்தல், நீரினை மறுசுழற்சி செய்தல், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரத்தினை வளர்த்தல், உடைந்த குழாய்களை சீர் செய்தல், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் அனைத்து கிராமங்களிலும் ஜல் ஜீவன் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.