ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்-வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு
வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன், அண்மையில் மும்பையில் யூனியன் கூட்டத்தினை நடத்தியது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் ஜனவரி 30, 31 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்தது. ஊதிய உயர்வு, பென்ஷன் உயர்வு, வங்கி சேவைக்கு தேவையான ஊழியர்கள் தேர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள். இது குறித்து மத்திய அரசுக்கு நோட்டிஸும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏற்கனவே தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறையில் இருந்தது. இதனால் பொதுமக்களின் பண பரிமாற்றம் போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கும். மீண்டும் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 28, 29ம்தேதிகள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்கள் ஆகும்.
நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட போராட்டம் அறிவிப்பு
ஒரே மாதத்தில் 8 நாட்கள் வங்கிகள் இயங்கவில்லை என்றால் பணம் மற்றும் காசோலை மாற்றும் பணிகள் தேக்கம் அடைந்து சிறு தொழில் செய்வோர், வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இந்நிலையில் இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறுகையில், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக வாடிக்கையாளர் சேவைகள் பாதிக்கப்படுகிறது. எனவே, போதுமான ஊழியர்களை பணியமர்த்த வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், தொடர்ந்து 4 நாட்கள் வேலை நிறுத்தம் நிச்சயம் செய்யப்படும் நிலையில், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதோடு காசோலை பரிவர்த்தனை பல ஆயிரம் கோடி மதிப்பில் தேக்கமடையும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.