ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது - அமைச்சர் மா.சுப்ரமணியம்
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சியினை பிடித்தவுடனேயே புதிய தலைமை செயலகமாக ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றப்படுமா என்னும் கேள்விகள் எழுந்தது. சட்டசபைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஓமந்தூரார் கட்டிடத்தினை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பன்னோக்கு மருத்துவமனையாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மாற்றினார் என்னும் குற்றச்சாட்டு அப்போதிருந்தே இருந்து வரும் ஒன்றாகும். இந்நிலையில் அதனை தலைமை செயலகமாக மாற்ற எவ்வித திட்டமும் இல்லை. அது மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவமையாகவே செயல்படும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ரூ.230கோடி செலவில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையினை தமிழக அரசு கட்டியுள்ளது. இதனை வரும் ஜூன் 5ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் திறந்துவைக்கவுள்ளார்.
புதிய சிகிச்சை முறைகள் துவக்கி வைக்கப்பட்டது
இந்நிலையில் அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கிண்டிக்கு மாற்றப்படவிருப்பதாகவும், ஓமந்தூரார் வளாகத்தில் தலைமை செயலகம் செயல்படவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியம் பத்திரிகையாளர்களிடம், "ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகத்திற்காக அதற்கேற்ப கட்டப்பட்ட கட்டிடம் தான்". "முந்தைய ஆட்சியாளர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதனை மருத்துவமனையாக மாற்றினர்". "ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பரந்த மனதோடு அது மருத்துவமனையாகவே தொடர்ந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்". "மேலும் அந்த மருத்துவமனைக்கு அதிநவீன கருவிகளை வாங்கி கொடுத்து, புதிய சிகிச்சை முறைகளையும் அவர் தொடங்கி வைத்துள்ளார்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.