Page Loader
காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் அமைச்சரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.

காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ்

எழுதியவர் Sindhuja SM
Jan 30, 2023
03:14 pm

செய்தி முன்னோட்டம்

ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் உதவி காவல் துணை ஆய்வாளரால் நேற்று(ஜன 29) சுட்டுக் கொல்லப்பட்டார். மார்பில் பாய்ந்த தோட்டாவால், சுடப்பட்டு சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்தார். அமைச்சரை சுட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர்(ஏஎஸ்ஐ) கோபால் சந்திர தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இவருக்கு மனநல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. மதியம் 12.30 மணியளவில், அமைச்சர் தனது காரில் இருந்து இறங்கி, புதிதாகக் கட்டப்பட்ட பிஜேடி அலுவலகத்திற்கு செல்ல முயன்ற போது, ​​இந்த காவல்துறை அதிகாரி அவரை துப்பாக்கியால் சுட்டார் என்று செய்திகள் கூறுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் அமைச்சரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒடிஷா

யாரிந்த நபா கிசோர் தாஸ்?

அவர் சுடப்பட்டவுடன் முதலில் ஜார்சுகுடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் விமான ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின், அங்கேயே அவர் உயிரிழந்தார். தாஸ், ஒடிசாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார். மேலும் அவர் வரவிருக்கும் 2024 தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க இருந்தவர் ஆவார். நபா தாஸ் ஜார்சுகுடாவில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக கருதப்படுகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸைக் விட்டு பிஜேடிக்கு கட்சி மாறிய இவர், பிஜேடி ஆட்சியில் அமைச்சராக பதியேற்றார். முதல்வர் நவீன் பட்நாயக்கின் புதிய அமைச்சரவை ஜூன், 2022 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் இவரும் ஒருவராவார்.