சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம்
சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மேம்படுத்தல், விபத்துகளை குறைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சென்னையில் முக்கிய சாலைகளிலும் பார்க்கிங்'களிலும் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்துள்ள வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகிறார்கள். அதன்படி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட அளவுகள், எண்களின் வடிவம் ஆகியவற்றை சரியான முறையில் நம்பர் பிளேட்டுகள் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் உடனடியாக அந்த இருசக்கர வாகனங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான நோட்டீஸ் அந்த வண்டிலேயே ஒட்டப்படுகிறது.
முதலில் சிக்கினால் ரூ.500 அபராதம், மீண்டும் சிக்கினால் 3 மடங்கு அதிகரித்து அபராதம்
மேலும் நம்பர் பிளேட்டுகளில் போட்டோக்கள் ஒட்டுவது, வாசகங்கள் எழுதுவது, நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை இயக்குவது போன்ற வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது. முதல் முறை சிக்கினால் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும். அதன் பின்னரும் நம்பர் பிளேட்டை சரி செய்யாவிடில், போலீசில் சிக்கும் பட்சத்தில் மூன்று மடங்காக அபராதம் அதிகரித்து விதிக்கப்படும். அதாவது ரூ.1500 விதிக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளார்கள். அதன்படி இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலைய பார்க்கிங் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பார்க்கிங்கில் வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேலு தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.