9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுவடைந்து நேற்று(மே.,9) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், மேலும் அது வலுவடைந்து புயலாக மாறவுள்ளது என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. புயல் காலங்களில் மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் கடலில் பயணம் செய்யும் அல்லது துறைமுகப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பினை கருதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட துறைமுகங்களில் இந்த கூண்டானது ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.