50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ புதிய செயல்முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி, இந்த புதிய செயல்முறையில் ஆதார் பயன்படுத்துவோர் எந்த வகையான ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் தங்கள் முகவரி மாற்றம் அல்லது புதுப்பித்தல் ஆகியவைகளை செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. குடும்பதலைவரின் ஒப்புதலுடன் இந்த வசதியை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இது வாடகை வீட்டில் உள்ளோர் மற்றும் திருமணமாகி வேறு வீட்டிற்கு செல்வோருக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்கலாம் அல்லது ஒடிபி அங்கீகாரம் பெற்றும் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் குடும்ப தலைவரின் ஆதார் எண் அடிப்படையில் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் ஆதார் எண்ணில் முகவரியை மாற்றலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆதார் புதுப்பிப்பு/திருத்தம் என்னும் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்
மேலும் இதுபோன்ற மாற்றத்தை மேற்கொள்ள ஆதார் பதிவு மையத்திற்கு நேரில் செல்வது சிறந்தது. அங்கு ஆதார் புதுப்பிப்பு/திருத்தம் என்னும் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து நன்கு சரிபார்த்த பின்னர் அங்குள்ள ஆதார் நிர்வாகியிடம் கொடுக்க வேண்டும். இதன் பிறகு படிவம் சமர்ப்பித்த புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) அடங்கிய ஒப்புகை சீட்டை ஆதார் நிர்வாகி நம்மிடம் கொடுப்பார். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். இதனையடுத்து, URN எண்ணை வைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்த்து கொள்ளலாம். கட்டணம் செலுத்திய பின்னர் குடும்ப தலைவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வரும், குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் அவர் தனது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.