டெல்லி ஆசிட் வீச்சு: ஈகாமர்ஸ் ஷாப்பிங் தளங்களுக்கு நோட்டீஸ்!
டெல்லியில் 17 வயது பள்ளி மாணவியின் மீது ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், பிளிப்கார்ட் என்னும் ஆன்லைன் தளம் மூலமாக அந்த ஆசிட்டை வாங்கியுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது. இதன் பின்பே, இது போன்ற அபாயகரமான ரசாயனங்கள் எவ்வளவு எளிதில் குற்றவாளிகள் கையில் கிடைக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, டெல்லி மகளிர் ஆணையம் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அனுப்பப்பட்ட நோட்டீஸில் இது போன்ற அபாயம் விளைவிக்கும் ஆசிட்கள் எளிதாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடாது என்று எழுதப்பட்டிருக்கிறது. இது பற்றிய அறிக்கைகளை இந்த நிறுவனங்கள் இன்னும் வெளியிடவில்லை.
டெல்லி ஆசிட் வீச்சு சம்பவம்: ஒரு அப்டேட்!
டெல்லி உத்தம் நகர் சாலையில் தன் சகோதரியுடன் சென்று கொண்டிருந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மனைவியின் மீது ஆசிட் வீசிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து இருவர் தப்பினர். இந்த கொடூர சம்பவம் கடந்த 14ஆம் தேதி காலை நடந்தது. காயமடைந்த அந்த சிறுமி மருவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு 8% வரை முகத்தில் மற்றும் கழுத்தில் காயம்பட்டுள்ளது. தோலும் உடலும் சில இடங்களில் சிதைந்திருந்தாலும் பார்வை நன்றாகத் தெரிகிறது என்று இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுமியின் மீது ஆசிட் வீசிய வழக்கில் சச்சின் அரோரா (20), ஹர்ஷித் அகர்வால்(19) மற்றும் வீரேந்தர் சிங்(22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.