புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(மே-26) தள்ளுபடி செய்தது. மக்களவை செயலகமும், மத்திய அரசும் குடியரசுத் தலைவரை விழாவிற்கு அழைக்காமல் அவமானப்படுத்துவதாக மனுதாரரும் வழக்கறிஞருமான ஜெயா சுகின் வாதிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்த மனு ஏன், எப்படி தாக்கல் செய்யப்பட்டது என்பதை நீதிமன்றம் புரிந்துகொள்கிறது. ஆனால், அரசியலமைப்பின் 32-வது சட்டபிரிவின் கீழ் இந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை" என்று கூறியது.
நாட்டின் நிர்வாகத் தலைவரான குடியரசு தலைவர் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும்: மனுதாரர்
79வது சட்டபிரிவிற்கு கீழ், ஜனாதிபதி நாட்டின் நிர்வாகத் தலைவர் என்றும் அவர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சுகின் கூறினார். மேலும் அவர், இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றால், அதை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். இதனையடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதித்த உச்ச நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க இருக்கிறார். குடியரசுத் தலைவர் ஓரங்கட்டப்படுவதாக கூறி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை 21 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில், இதற்காக தாக்கல் செய்யபட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.