"இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு
பெங்களூரில் கடை பெயர் பலகைகள் பெரும்பாலும் உள்ளூர் மொழியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அங்கு நடக்கும் வன்முறைகளுக்கு ஆதரவளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். கன்னடத்தில் அல்லாத பெயர் பலகைகளை கொண்ட கடைகளை, கன்னட குழுக்கள் அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர், என்டிடிவியிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். "எல்லோரும் பெயர் பலகைகளை படிக்க வேண்டும், எல்லோராலும் ஆங்கிலம் படிக்க முடியாது. கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் அல்லது ஹிந்தி போன்ற வேறு மொழியிலும் எழுதுவதால் என்ன தீங்கு? இது இங்கிலாந்து இல்லை" என தெரிவித்தார். வன்முறையை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்தவர், கடை உரிமையாளர்கள், உணர்வை புரிந்துகொள்ள வேண்டுமென பேசினார்.
சர்ச்சையை கிளப்பிய 60% கன்னட உத்தரவு
பெங்களூர் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் உள்ள பெயர் பலகைகள், குறைந்தது 60% கன்னடத்தில் இருக்க வேண்டுமென ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே, கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. பெயர் பலகைகளை மாற்ற பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. உத்தரவு பின்பற்றப்படாத கடைகள் மீது, தொழில் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த உத்தரவை விரைவாக அமல்படுத்த கோரி பல்வேறு கன்னட அமைப்புகள், நேற்று பெங்களூர் மாநகரம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு, லாவெல்லே ரோடு மற்றும் செயின்ட் மார்க்ஸ் ரோடு, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியும் போராட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன.