LOADING...
வட இந்தியாவில் உறையும் குளிர்! மைனஸ் டிகிரிக்குச் சென்ற வெப்பநிலை
வெப்பநிலை உறைநிலைக்கு கீழ் குறைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

வட இந்தியாவில் உறையும் குளிர்! மைனஸ் டிகிரிக்குச் சென்ற வெப்பநிலை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2026
09:19 am

செய்தி முன்னோட்டம்

வட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் குளிர் அலை வீசி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வெப்பநிலை உறைநிலைக்கு கீழ் குறைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் சீகர் மாவட்டத்தில் உள்ள ஃபதேபூர் பகுதியில் வெப்பநிலை மைனஸ் 0.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. குருகிராம் மற்றும் பஞ்சாபின் பதிண்டா ஆகிய இடங்களில் 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குருகிராமில் நிலவி வரும் கடும் குளரால் வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் புல்வெளிகள் மீது உறைபனி படலங்கள்(Ground Frost) காணப்படுகின்றன. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.2 டிகிரியாக பதிவாகியுள்ளது, இது இயல்பை விட 4.2 டிகிரி குறைவாகும்.

வானிலை எச்சரிக்கை

இன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது IMD 

வானிலை ஆய்வு மையம் பகிர்ந்து கொண்ட விவரங்களின்படி, ஜனவரி 12 மற்றும் 13ஆம் தேதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஜனவரி 13ஆம் தேதிக்குப் பிறகு, சிவப்பு எச்சரிக்கை நீக்கப்படும், மேலும் ஜனவரி 17 வரை மஞ்சள் எச்சரிக்கை அமலில் இருக்கும். 2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு டெல்லியில் பதிவான மிகக் குளிர்ந்த ஜனவரி நாள் இதுவாகும். கடும் மூடுபனி காரணமாக சாலைகளில் வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. பொதுமக்களும், குறிப்பாக முதியவர்களும் குழந்தைகளும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு IMD அறிவுறுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் கடும் குளிர் நீடிக்கிறது; அங்குள்ள நீர்நிலைகள் பல இடங்களில் உறையத் தொடங்கியுள்ளன. லாகால்-ஸ்பிதி பகுதியில் மைனஸ் 9.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Advertisement