கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு
கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே காக்கநாடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 19 சிறார்களுக்கு நோரா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தீடிரென வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த சுகாதாரத்துறையினர் மாணவர்களை சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு பயிலும் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 62 மாணவர்களின் ரத்தமாதிரிகளை சுகாதாரத்துறையினர் எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தொற்று உறுதிசெய்யப்பட்டு, அதிக பாதிப்படைந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவரது பெற்றோர்களும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தொற்று பாதித்தோர் வீட்டிலேயே ஓய்வெடுக்க அறிவுறுத்தல்
வைரஸ் கண்டறியப்பட்ட பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த நோரா வைரஸ் தொற்று கழிவுநீரால் பரவக்கூடியது என்பதால் வாந்தி, பேதி இதன் முதல் அறிகுறி ஆகும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அதிகரிக்கும் இந்த தொற்று காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்றவைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தால் உடலில் நீரிழப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் இணைநோயால் குழந்தைகள் மற்றும் வயதானோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிகம் பரவக்கூடும் தன்மைகொண்டதால் வீட்டிலேயே ஓய்வெடுக்கவும், தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்படுகிறது.