Page Loader
பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது..ஆனால்!
பிற மதத்தவர்கள் கோவிலின் உள்ளே வர விருப்பப்பட்டால், உறுதிமொழி அளித்துவிட்டு உள்ளே செல்ல அனுமதிக்கபடவேண்டும் என உத்தரவிட்டார்

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது..ஆனால்!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 30, 2024
03:15 pm

செய்தி முன்னோட்டம்

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில், இந்து மதத்தை சாராதவர்கள் கோவில் கொடி மரத்தை தாண்டி உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பழனியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் தொடுத்த மனுவில், பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்து மதம் அல்லாத பிற மதத்தைச் சார்ந்தவர்களோ, இறைநம்பிக்கை இல்லாதவர்களோ கோவிலுக்குள் வருவது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது எனவும் அதனால், இந்து மதம் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

பழனி முருகன் கோவில்

நீதிபதி உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்து மதத்தை சாராதவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கோவில் கொடி மரத்தை தாண்டி உள்ளே வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார். அதோடு, இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என குறிப்பிடப்பட்ட பதாகைகளை கோவிலின் பல பகுதிகளில் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இது தவிர, பிற மதத்தவர்கள் கோவிலின் உள்ளே வர விருப்பப்பட்டால், கோவிலின் நுழைவு வாயிலில் வைக்கப்படும் வருகை பதிவேட்டில்,"கடவுள் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக கோவிலுக்குள் செல்ல விருப்பப்படுகிறேன்" என உறுதிமொழி அளித்துவிட்டு உள்ளே செல்ல அனுமதிக்கபடவேண்டும் என உத்தரவிட்டார்.