
டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணால் ₹6.5 கோடியை இழந்த இந்திய தொழிலதிபர்
செய்தி முன்னோட்டம்
நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் டேட்டிங் செயலியில் சந்தித்த ஒரு பெண்ணால் மோசடியான ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்து ₹6.5 கோடியை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த செக்டார் 36 இல் வசிக்கும் தல்ஜித் சிங், இந்த மோசடியில் தான் எவ்வாறு பாதிக்கப்பட்டேன் என்பதை விவரித்து கடந்த புதன்கிழமை (மார்ச் 26) சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்.
தல்ஜித் சிங்கின் கூற்றுப்படி, டிசம்பர் 2024 இல் ஒரு டேட்டிங் செயலியில் அனிதா சவுகான் என்ற பெண்ணை அவர் சந்தித்தார்.
முன் அனுபவம் இல்லாவிட்டாலும், ஆன்லைன் வர்த்தகம் மூலம் கணிசமான லாபம் ஈட்ட முடியும் என்று அவர் தல்ஜித்தை நம்ப வைத்துள்ளார்.
லாபம்
ஆரம்ப லாபத்தை பார்த்து பேராசை
ஆரம்பத்தில், தல்ஜித் சிங் ₹3.2 லட்சம் முதலீடு செய்து ₹24,000 லாபம் ஈட்டினார். இது அவரது நம்பிக்கையை அதிகரித்தது.
இந்த ஆரம்பகால வருமானத்தால் ஊக்கமடைந்த அவர், பல வங்கிக் கணக்குகளில் இருந்து ₹6.52 கோடியை முதலீடு செய்தார்.
அவற்றில் சில கடன்கள் மூலம் பெறப்பட்டன. இருப்பினும், வர்த்தக தளங்களிலிருந்து தல்ஜித் சிங் தனது நிதியை எடுக்க முயன்றபோது சிக்கல் ஏற்பட்டது.
தளங்கள் 30% பாதுகாப்பு கட்டணத்தையும், கூடுதலாக ₹61 லட்சத்தை பரிமாற்ற சேவை கட்டணமாகவும் கோரியபோது அவருக்கு சந்தேகம் ஏற்பட, இது மோசடியானது என்பதை உணர்ந்துள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்ததோடு, போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களின் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் தொடர்புத் தகவல்களை தல்ஜித் சிங் வழங்கியுள்ளார்.