கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள்
1978 மற்றும் 2018க்கு இடைப்பட்ட 40 ஆண்டுகளில், கர்நாடக சட்டசபைக்கு 62 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் மொத்த பெண் வேட்பாளர்களில் சுமார் ஆறு சதவீதம் பேர் மட்டுமே நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டிருக்கின்றனர். மேலும், கர்நாடக மாநிலம் இதுவரை ஒரு பெண் முதலமைச்சரை கூட கண்டதில்லை. அதிகபட்சமாக 1989இல் 10 பெண்கள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறைந்தபட்சமாக 1983ல் ஒரு பெண் மட்டுமே சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தகவல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று தேர்தல்களில் வெறும் 16 பெண்கள் மட்டுமே சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2018இல் ஏழு பெண்களும், 2013இல் ஆறு பெண்களும், 2008இல் மூன்று பெண்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்கிறது நியூஸ் 18 செய்திகள்.
2018ஆம் ஆண்டில் 91% பெண் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்
1978 மற்றும் 2018க்கு இடைப்பட்ட தேர்தல்களில் கலந்துகொண்ட பெண் வேட்பாளர்களில் 83%க்கும் அதிகமானோர் டெபாசிட் இழந்து தோல்வியடைந்துள்ளனர். 1,040 பெண் வேட்பாளர்களில் குறைந்தது 864 பேர் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். 2018ஆம் ஆண்டில், 219 பெண் வேட்பாளர்களில் 200 பேர் டெபாசிட் இழந்தனர். அப்போது டெபாசிட் இழந்த பெண்களின் சதவீதம் 92 ஆக இருந்தது. அதேபோல், 2013இல் போட்டியிட்ட 175 பெண்களில் 159 பேர் டெபாசிட்களை இழந்தனர். இது சுமார் 91%ஆகும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 1978இல் கூட, கர்நாடக வாக்காளர்களில் கிட்டத்தட்ட 50% பேர் பெண்களாக இருந்தனர். அதாவது, 1.79 கோடி வாக்காளர்களில், 88.08 லட்சம்(49.17%) பேர் பெண்கள் ஆவர். எனினும், அம்மாநிலத்தில் பெண் வேட்பாளர்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றனர்.