மசோதாக்கள் மீதான ஆளுநரின் அதிகாரம்: காலவரையின்றி நிறுத்தி வைக்கத் தடை: உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் ஏற்படும் காலதாமதம் குறித்த வழக்கில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்திவைக்க முடியாது என்றும், ஆனால், அதற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். முன்னதாக, மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக, மசோதாக்கள் மீது முடிவெடுக்க நீதிமன்றங்கள் காலக்கெடு விதிக்க முடியுமா என்பது உள்ளிட்ட 14 கேள்விகளை எழுப்பி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அரசியலமைப்புச் சட்டம் 143(1)-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் ஆலோசனை (Presidential Reference) கேட்டிருந்தார்.
விவரம்
வழக்கின் விவரங்கள்
காரணம் ஏதும் கூறாமல் ஆளுநர் நீண்டகாலம் மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலவரையறை நிர்ணயிக்க முடியாது. அத்தகைய காலக்கெடுவை விதிப்பது, அதிகாரப் பிரிப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் நெகிழ்ச்சித் தன்மைக்கு எதிரானது. ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டால், அவருக்கு உள்ள விருப்பங்கள் மூன்று மட்டுமே: 1. மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது. 2. மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைப்பது. 3. மசோதாவை மறுபரிசீலனைக்குச் சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்புவது. ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம் என்பது, மசோதாவை ஆய்வு செய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்புவது மட்டுமே. காரணம் எதுவும் கூறாமல் மசோதாவை நிறுத்தி வைக்கும் நான்காவது வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை.
அதிகாரம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம்
பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக் கூடாது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனில், அதைச் சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பிவிட வேண்டும். இது தமிழக அரசிற்கு ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. காரணம், ஆளுநர் ரவி, தமிழக அரசு அனுப்பிய பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை ஆளும் தமிழக அரசு முன்வைத்துள்ளது. அதோடு இது குறித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தீர்ப்பு வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.