'2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அவசரமும் இல்லை': RBI கவர்னர்
ரூ.2,000 நோட்டுகளை மாற்ற யாரும் அவசரப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கியின்(RBI) கவர்னர் சக்திகந்த தாஸ் இன்று(மே-22) தெரிவித்துள்ளார். நாளை முதல் ரூ.2000 நோட்டுகளை வங்கிகள் திரும்ப பெற இருக்கும் நிலையில், RBI கவர்னர் சக்திகந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகும் ரூ.2,000 நோட்டுகள் செல்லுபடியாகும் என்று அவர் கூறியுள்ளார். "இப்போது வங்கிகளுக்கு விரைந்து செல்ல எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கு செப்டம்பர் 30 வரை நான்கு மாதகால அவகாசம் உள்ளது" என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறி இருக்கிறார். இப்படி ஒரு காலக்கெடுவை கொடுத்தால், மக்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு நோட்டுகளை திரும்பப் பெற முயற்சி செய்வார்கள் என்பதற்காகவே அது கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போதுமான கரன்சி நோட்டுகள் கையிருப்பில் இருக்கிறது: சக்திகந்த தாஸ்
"ரூ.2,000 நோட்டுகளை மாற்ற தேவையான ஏற்பாடுகள் வங்கிகளில் செய்யப்பட்டுள்ளது. போதுமான கரன்சி நோட்டுகள் கையிருப்பில் இருக்கிறது." என்று சக்திகந்த தாஸ் கூறியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. மேலும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மக்கள் அவற்றை மாற்றிக்கொள்ளலாம் அல்லது தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் பிற வங்கிகள், மே 23ஆம் தேதி முதல் ரூ.2,000 நோட்டுகளை பெற்றுக்கொள்ளும். 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த படிவமும், அடையாளச் சான்றும் தேவையில்லை என்று இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி(SBI) நேற்று தெளிவுபடுத்தி இருந்தது.