2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: SBI
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த படிவமும், அடையாளச் சான்றும் தேவையில்லை என்று இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி(SBI) தனது அனைத்து கிளைகளுக்கும் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகள்(ரூ.20,000) வரை மாற்றி கொள்ளலாம் என்று SBI அறிவித்துள்ளது. மேலும், ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் வங்கிக்கு வந்து 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தடை செய்யப்பட்ட நோட்டுகளை மாற்றுவதற்கு ஆதார் அட்டை போன்ற அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிப்பதோடு, ஒரு படிவத்தையும் நிரப்ப வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கூறப்படும் தவறான தகவல்களுக்கு மத்தியில் SBI இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்
இந்திய ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. மேலும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மக்கள் அவற்றை மாற்றிக்கொள்ளலாம் அல்லது தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் பிற வங்கிகள், மே 23ஆம் தேதி முதல் ரூ.2,000 நோட்டுகளை பெற்றுக்கொள்ளும். தேவைப்பட்டால், ரிசர்வ் வங்கி செப்டம்பர் 30க்கு மேல் காலக்கெடுவை நீட்டிக்கலாம். ஆனால் தற்போதைய காலக்கெடு முடிந்த பிறகு யாராவது ரூ.2,000 நோட்டை வைத்திருந்தாலும், அது செல்லுபடியாகும் என்று NDTV செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.