ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு மாநிலத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கரகாட்டம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி கோரப்பட்டு திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் தனித்தனியே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். கோயில் திருவிழாக்களின் போது நடத்தப்படும் இது போன்ற ஆடல் பாடல், நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே நீதிமன்றமும், காவல்துறையும் விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த மனுக்கள் அண்மையில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் அனுமதி கோரினால் காவல்துறை பதில் அளிக்காமல் உள்ளதாக கூறினர்.
புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என கருத்து
இதனையடுத்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரினால் மனு தந்த 7 நாட்களில் அனுமதி தர வேண்டும், அல்லது இல்லை என்று பதிலளிக்க வேண்டும். அப்படி கூறாவிட்டால், அனுமதி வழங்கியதாகவே கருதப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அனைத்து மாவட்டத்தின் எஸ்.பி.களுக்கும் இதுகுறித்து புது சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கு இன்று(ஜூன்.,1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆடல் பாடல் நிகழ்வு குறித்து புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை விசாரிக்க வேண்டியதில்லை. முன்பு கூறியவாறு மனு தந்த 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும். இனி இதுகுறித்து புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.