சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறையின் 24 மணி நேர உதவி மையத்தை துவக்கி வைக்க அமைச்சர் சேகர்பாபு இன்று அங்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து, கோயில் தொடர்பான ஆலோசனை மற்றும் குறைகளை பொதுமக்கள் தெரிவிக்க 1800 425 1757 என்ற தொலைபேசி எண்ணையும் அவர் அறிமுக செய்து வைத்தார். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருக்கோயில்களில் நடக்கும் சிறு பிரச்சனைகளை கூட உடனே தீர்த்து வைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குறைகள் உரிய முறையில் நிவர்த்தி செய்யப்படும் என்றும், முதல் கட்டமாக 1000 திருக்கோயில்களில் இந்த புகாரளிக்கும் தொலைபேசி எண் சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நடராஜர் கோயிலில் அத்துமீறல் இல்லாமல் நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்- சேகர்பாபு
தொடர்ந்து பேசிய அவர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், அழுத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அறநிலையத்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் ஆதாரபூர்வமாகவே எடுக்கப்படுகிறது என்று கூறினார். மேலும், 'நடராஜர் கோயிலை கையகப்படுத்துவது அரசின் நோக்கம் அல்ல, அத்துமீறல் இல்லாமல் நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்' என்றும் தெரிவித்தார். திருக்கோயில்களில் பயன்படுத்த முடியாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றுவது முன்மாதிரி திட்டமாகும். எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் அந்த திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தீட்சிதர்கள் இது குறித்து நீதிமன்றம் செல்வோம் என்று கூறிய நிலையில் அவர்கள் இதுவரை நீதிமன்றத்தை அணுகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.