எந்த இந்திய மொழியும் தமிழுக்கு இணையில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி
சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனில் இன்று(செப்.,23) தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடினார் என்று கூறப்படுகிறது. அதில் அவர் பேசுகையில், "எந்த இந்திய மொழியும் தமிழ் மொழிக்கு இணையானது இல்லை. தமிழ் மொழியோடு ஓரளவுக்கு இணையானது என்றால் சமஸ்கிரத மொழியினை கூறலாம்" என்று கூறியுள்ளார். மேலும் அவர், "தமிழ்நாடு மாநிலத்திற்கு வருவதற்கு முன்னர் தமிழின் தொன்மையான வரலாறு குறித்து எதுவும் எனக்கு தெரியாது" என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார். தமிழ் மொழி கற்பதன் ஆரம்ப நிலையில் தான் உள்ளதாக கூறிய கவர்னர், தமிழ் இலக்கியங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
மொழி தான் மக்களின் ஆன்மாவாக உள்ளது - கவர்னர்
இதனை தொடர்ந்து பேசிய அவர், 'திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூலினை படிக்க துவங்கிய பின்னரே எனக்கு தமிழ்மொழி மீதான ஆழமான அன்பு ஏற்பட்டது. தமிழில் கூறப்படும் அறம் என்னும் சொல்லிற்கு இணையான சொல் வேறு மொழியில் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர், ஒரு மொழி தான் மக்களின் ஆன்மாவாக உள்ளது, அதே மொழி தான் மக்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மையான வரலாற்றினை எடுத்துரைக்க உதவுகிறது என்று பேசியுள்ளார். கடவுளை வழிபடுவது மட்டும் ஆன்மீகம் ஆகிவிடாது, ஒரு உயிரினம் கஷ்டப்படுவதை கண்டு கவலையடைவதும் ஆன்மீகம் தான் என்று கூறிய கவர்னர், தமிழ் மொழியினை மொழிபெயர்ப்பு செய்து மற்ற மொழியினருக்கு வழங்குவது என்பது அருமையான பணியாகும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.