
இடைக்கால பட்ஜெட் 2024: வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை
செய்தி முன்னோட்டம்
வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை என இடைக்கால பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனது ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 2வது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றிருக்கும் நிர்மலா சீதாராமன், வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட்டில் பொதுவாக பெரிய மாற்றங்கள் எதுவும் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டதில்லை என்பதால் இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டதே.
"இறக்குமதி வரி உட்பட நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கு அதே வரி விகிதங்களைத் பின்பற்ற நான் முன்மொழிகிறேன்," என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கடந்த 2023 பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தை இலக்காகக் கொண்டு தனிநபர் வருமான வரியில் பல மாற்றங்களை சீதாராமன் அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றம்
நிலுவையில் உள்ள நேரடி வரி கோரிக்கைகளை திரும்பப் பெற முன்மொழிவு
ஆனால், வரி விகிதங்களில் இந்த வருடம் எந்த மாற்றமும் இல்லை.
எனினும், 09-10 நிதியாண்டு வரை நிலுவையில் இருந்த நேரடி வரி கோரிக்கைகளான ரூ.25,000 மற்றும் 10-11 நிதியாண்டு முதல் 14-15 நிதியாண்டு வரை நிலுவையில் இருந்த நேரடி வரி கோரிக்கைகளான ரூ.10,000 ஆகிய நேரடி வரி கோரிக்கைகளைத் திரும்பப் பெற அவர் முன்மொழிந்தார். இதனால், ஒரு கோடி வரி செலுத்துவோர் பயனடைவர் என்று அவர் கூறினார்.
"1962 ஆம் ஆண்டு வரையிலான சிறிய, சரிபார்க்கப்படாத, சமரசம் செய்யப்படாத அல்லது சர்ச்சைக்குரிய நேரடி வரிக் கோரிக்கைகள் ஏராளமாக உள்ளன. அந்த நிலுவையில் உள்ள நேரடி வரி கோரிக்கைகளை திரும்பப் பெற நான் முன்மொழிகிறேன்." என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.