நிதிஷ் குமார் ராஜினாமா செய்வது உறுதி! எக்ஸ் தளத்தில் எமோஷனல் பதிவு; அடுத்த முதலமைச்சர் யார்?
செய்தி முன்னோட்டம்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்கத் தயாராகி வருகிறார். இது குறித்து பீகார் மக்களுக்கு அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த வாக்காளர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். 10 வது முறையாகப் பீகார் முதல்வராகப் பதவியேற்ற நான்கு மாதங்களிலேயே இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார்.
அரிய சாதனை
நான்கு அவைகளிலும் இடம்பெறும் அரிய சாதனை
நிதிஷ் குமாரின் இந்த முடிவிற்குப் பின்னால் ஒரு நீண்ட கால லட்சியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிதிஷ் குமார் ஏற்கனவே பீகார் சட்டமன்றம், பீகார் சட்ட மேலவை மற்றும் மக்களவை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது மாநிலங்களவைக்குச் செல்வதன் மூலம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மற்றும் மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்த மிகச் சில இந்தியத் தலைவர்களின் பட்டியலில் அவர் இணைய உள்ளார்.
அடுத்த முதலமைச்சர்
பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார்?
நிதிஷ் குமார் டெல்லி அரசியலுக்குச் செல்வது உறுதியாகியுள்ள நிலையில், பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மார்ச் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தல் வரை நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியில் நீடிப்பார் என்று ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவருக்குப் பிறகு ஆட்சியை வழிநடத்தப் போவது யார் என்பது குறித்து பீகார் அரசியலில் பெரும் விவாதங்கள் மற்றும் யூகங்கள் கிளம்பியுள்ளன.
மாநில வளர்ச்சி
மாநில வளர்ச்சிக்கான உறுதிமொழி
பதவியை விட்டு விலகினாலும், பீகார் மாநிலத்துடனான தனது பிணைப்பு ஒருபோதும் மாறாது என்று நிதிஷ் குமார் உறுதியளித்துள்ளார். புதிய அரசுக்குத் தனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் எப்போதும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். "வளர்ச்சியடைந்த பீகாரை உருவாக்குவதில் எனது உறுதிப்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவாக இருக்கும்" என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்தத் திடீர் அரசியல் நகர்வு மூலம் , அவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.