Loading...
பர்லியாரில் 250 மிமீ பேய் மழை; காட்டுக்குள் அடித்து செல்லப்பட்ட பேருந்து; நீலகிரியில் மண்சரிவு பீதி
நீலகிரியில் 10 இடங்களில் மண்சரிவு

பர்லியாரில் 250 மிமீ பேய் மழை; காட்டுக்குள் அடித்து செல்லப்பட்ட பேருந்து; நீலகிரியில் மண்சரிவு பீதி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2026
09:13 am

செய்தி முன்னோட்டம்

வடகிழக்கு பருவமழை அசுர வேகம் எடுத்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்லியார் பகுதியில் ஒரே இரவில் 250 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்தத் தீவிர மழையின் காரணமாக மலைப்பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய மண்சரிவுகள் ஏற்பட்டுப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதிக்குள் பேருந்து

மண்சரிவில் சிக்கி வனப்பகுதிக்கு அடித்து செல்லப்பட்ட பேருந்து

மலைச்சாலையில் உள்ள செக் போஸ்ட் பகுதியில் இன்று காலை மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்டதில், அங்கு நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்று சரிந்து அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு அடித்து செல்லப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணிகள் யாரேனும் இருந்தார்களா மற்றும் அவர்களின் நிலை என்ன என்பது குறித்துக் காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அப்பகுதியில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

6 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் போக்குவரத்து மாற்றம்

கனமழை பாதிப்புகளைத் தொடர்ந்து, உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால், அந்த பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

மேலும், கிருஷ்ணா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், ஓட்டுப்பட்டறை பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததாலும் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

தீவிர மீட்புப் பணிகளும் சுற்றுலா பயணிகளுக்கான எச்சரிக்கையும்

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் சாலையில் குவிந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நிலச்சரிவு குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

தற்போதைய சூழலில், நீலகிரியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், சுற்றுலா பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை உடனடியாக ரத்து செய்யுமாறும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அவசர அறிவுறுத்தல் வழங்கி வருகின்றன.

ADVERTISEMENT