அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு
2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜகவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், பாஜக அரசின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் சில மாநில கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த கருத்து வேறுபாடுகளை நீக்கி மொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் விதமாக பீகார் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையில் கடந்த மாதம் 23ஆம் தேதி பீகாரில் வைத்து ஒரு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் திமுக, மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
ஜூலை 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும்
இந்நிலையில், அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரும் 13 மற்றும் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கிடையில், கர்நாடக மற்றும் பீகார் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால், அறிவிக்கப்பட்ட தேதியில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறாது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் கே.சி. தியாகி அறிவித்தார். இதனையடுத்து, இது குறித்து ட்வீட் செய்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ஜூலை 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.