பயங்கரவாத எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனருக்கு 7 நாள் காவல்
சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் நேற்று(அக் 3) டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனரும், அந்நிறுவனத்தின் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்காயஸ்தா 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று காலை பிரபீர் புர்காயஸ்தா நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். புர்காயஸ்தாவுடன் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் HR தலைவர் அமித் சக்ரவர்த்தியும் சிறப்பு நீதிமன்றத்தால் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொள்ள சீன தொடர்புகளிடம் இருந்து பணத்தை பெற்றதாக அவர்கள் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நியூஸ் கிளிக் அலுவலகம் மற்றும் செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய சுமார் 40 பத்திரிகையாளர்களின் வீடுகளில் நேற்று சோதனை நடத்திய காவல்துறையினர் புர்காயஸ்தா மற்றும் சக்ரவர்த்தியை கைது செய்தனர்.
நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கு சீல் வைத்த போலீசார்
சோதனைக்குப் பிறகு, டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கும் போலீசார் சீல் வைத்தனர். கிட்டத்தட்ட 46 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. அந்த 46 பேரும் விசாரணைக்கு பிறகு, விடுவிக்கப்பட்டனர். இந்தியாவில் சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்தை மேற்கொள்ள அமெரிக்க கோடீஸ்வரரான நெவில் ராய் சிங்கத்திடம் இருந்து நியூஸ் கிளிக் இணையதளம் பணம் பெற்றதாக சமீபத்தில் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, நியூஸ் கிளிக் நிறுவனம் டெல்லி காவல்துறை மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் கண்காணிப்பில் இருந்தது.