ஃபெஞ்சல் புயல் வெள்ளப்பெருக்கு: ரூ.16 கோடியில், கட்டிய 3 மாதத்தில் இடிந்து உடைந்த தென் பெண்ணையாற்று பாலம்
திருவண்ணாமலையில், தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ரூ.16 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் 3 மாதங்களில் இடிந்து விழுந்தது. இது, மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தனூர் அணையில் பாசனத்திற்கான தண்ணீர் திறக்கப்பட்டபோது, அகரம்பள்ளிப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள், தென் பெண்ணை ஆற்றை கடந்து செல்வதில் பெரும் சிக்கலுக்கு உள்ளானனர். இதனால், அவர்கள் சுமார் 15 கி.மீ. தூரம் சுற்றி, வேறு ஊர்கள் வழியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்குப் பின்னர், அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்க, தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.
Twitter Post
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலம்
தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட இந்த பாலம் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். ஆனால், தற்போது கடந்து சென்ற ஃபெஞ்சல் புயல் காரணமாக சாத்தனூர அணை வேகமாக நிரம்பி, அதன் சுமார் 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் பாலமும் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதிகாரிகள் தரத்தை பரிசோதனை செய்யவில்லையா என்ற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை.