தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம்
தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுவதில் சீர்திருத்தம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்குக்கான தீர்ப்பானது இன்று(மார்ச்.,2) அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு சுதந்திரமான ஓர் அமைப்பு வேண்டும். பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலம் தேர்தல் ஆணையர்கள் இனி தேர்வு செய்யப்படுவார்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே போல், தேர்தல் ஆணையர்கள் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டுமானாலும் இதே வழிமுறையையே கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய தேர்தல் ஆணையர் நியமன நடைமுறை ரத்து
இதனை தொடர்ந்து, தற்போதைய தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக தலையீட்டிலிருந்து தேர்தல் ஆணையத்தை மீட்க வேண்டிய அவசியம் தற்போது உண்டாகியுள்ளது. அரசு தலையிட்டு அவர்களை நீக்கம் செய்யாதபடி தேர்தல் ஆணையத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. அரசியல் நிர்வாகங்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும், எந்த தலையீடும் இல்லாமல் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். சிபிஐ இயக்குனர் தேர்வு செய்வது போல தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.